×

பல்லடம் அருகே பொங்கலூர் பகுதியில் தென்னை, வாழை மரங்கள் சூறாவளி காற்றில் சேதம்

பல்லடம் : பல்லடம் அருகே பொங்கலூர் பகுதியில் சூறாவளி காற்றுக்கு சேதம் அடைந்த வாழை, தென்னைகளை வேளாண்மை அதிகாரிகள் நேரில் பார்வையிட்டனர்.
திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகேயுள்ள பொங்கலூர் ஒன்றியம், வேலம்பட்டி, புதுப்பாளையம், ஆண்டிபாளையம், அலகுமலை, கிருஷ்ணாபுரம், வேலாயுதம்பாளையம், கோவில்பாளையம், தொங்குட்டிபாளையம் பகுதிகளில் நேற்று முன்தினம் பலத்த சூறாவளி காற்று வீசியது. இதில் ஆயிரக்கணக்கான வாழை மரங்கள் முறிந்து சேதமாகின. இதேபோல மக்காச்சோளம், காய்கறி செடிகளும் அதிகம் சேதமானது. இது குறித்து தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் வேளாண்மை துறையினருக்கு தகவல் அளித்தனர்.

இதன்பேரில் சம்பவ இடத்தில் நேற்று வடக்கு அவிநாசிபாளையம் ஊராட்சி தலைவர் நடராஜ், தெற்கு தாசில்தார், தோட்டக்கலைத்துறை அலுவலர்கள், வேளாண் துறையினர், வருவாய்த்துறை அலுவலர்கள் நேரில் சென்று பார்வையிட்டு பாதிப்பு குறித்து விவசாயிகளிடம் கேட்டறிந்தனர். அப்போது, அரசுக்கு விரைவாக அறிக்கை சமர்ப்பித்து பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு, விரைவில் இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

பொங்கலூர் சக்தி நகரில் உள்ள டாஸ்மாக் பார் மேற்கூரை சீட் பலத்த காற்றால் நேற்று முன்தினம் சரிந்து விழுந்தது. அப்போது யாரும் இல்லாததால் அதிர்ஷ்டவசமாக உயிரிழப்பு தவிர்க்கப்பட்டது. ஏஎல்ஆர் லே-அவுட் மேற்கூரை சுமார் 100 மீட்டர் தூரத்திற்கு பறந்துபோய் விழுந்தது. இதில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. பலத்த காற்றால் பொங்கலூர் பகுதியில் பல இடங்களில் மின் கம்பங்கள் முறிந்து விழுந்தன. இதனால் அப்பகுதியில் மின் தடை ஏற்பட்டது. மின்சாரம் இல்லாமல் மக்கள் பெரிதும் சிரமப்பட்டனர். அதன் பின்னர் மின் வாரியத்தினர் சீரமைப்பு பணிகளை படிப்படியாக செய்து மின் விநியோகம் செய்தனர்.

The post பல்லடம் அருகே பொங்கலூர் பகுதியில் தென்னை, வாழை மரங்கள் சூறாவளி காற்றில் சேதம் appeared first on Dinakaran.

Tags : Pongalur ,Palladam ,Dinakaran ,
× RELATED பல்லடம் பெரியாயிபட்டி கிராமத்தில்...